Rss Feed
  1. மொழிபெயர்ப்பு

    திங்கள், 21 பிப்ரவரி, 2022

      தேடி எடுத்த திரவியம்

              
                                      (1)
               
    °°°°°°°°°°°°°°°°°°°●●●●°°°°°°°°°°°°°°°°°°
                                  
     
          
       ( சென்னை  மூதூரில் இடம்பெற்றுள்ள  இராயப்பேட்டைப் பகுதி  பீட்டர்ஸ் சாலையில் 1951ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் நாள்     புதுக்கல்லூரி( The New College) தோற்றுவிக்கப்பட்டது.   அப்போது  உள்துறை (Home Minister)  அமைச்சராக இருந்த இராஜாஜி அவர்கள் புதுக்கல்லூரியைத் திறந்துவைத்து உரையாற்றினார்.

     உரையில் இடம்பெற்றுள்ள   கருத்துக்கள் தற்காலச் சிந்தனைக்கும் சமூகத் தேவைக்கும் செயல்பாட்டுக்கும் பொருந்துமா என்று தெரியவில்லை.  ஆயினும் 
            இன்று ( 2-- 07-2021) புதுக்கல்லூரியின் 70ஆம் ஆண்டு பிறந்தநாளை    நினைவுகூரும் வகையில் வெளியிடப்படும் இராஜாஜியின் ஆங்கில உரை(சுருக்கம்).

    ○●○●○●○●○●○●○●○●○●


                      தமிழாக்கம்: 
      
      பேராசிரியர் முரளிஅரூபன்
                   புதுக்கல்லூரி.

    ●○●○●○●○●○●○●○●○●○●


     


         நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே சேலத்தைச் சேர்ந்த  முஸ்லிம் கல்விச் சங்கத்தினருடன் எனக்குத் தொடர்பிருந்தது.   அந்த நாள்கள் மிகவும் பரவசமூட்டிய நாள்களாக இருந்தன.  அப்போது வாழ்ந்த மக்களின் மனநிலையானது தற்கால மக்களின் மனநிலையில் இருந்து வேறுபட்டு இருந்தது.  அக்கால மக்கள் சில முறைகேடுகளையும்   தீமைகளையும் பார்க்க நேர்ந்தால்
    தீய எண்ணம் கொண்ட நபர்கள்தாம் இந்த முறைகேடுகளுக்கும் தீமைகளுக்கும் காரணம் என்று சொல்லமாட்டார்கள்;  அத்தகைய முறைகேடுகளுக்கும் தீமைகளுக்குமான காரண காரியங்களை முழுமையாக விசாரித்து   அவற்றைப் போக்கிட என்ன செய்யவேண்டுமோ அவற்றைச் செய்தார்கள்.     கல்வியறிவின்மையே முஸ்லிம் மக்களின் பின்தங்கிய நிலைக்குக் காரணம் என்பதை நன்குணர்ந்த முஸ்லிம் பெரியோர்களும் அவர்களின் தோழர்களும் ஒன்றுசேர்ந்து முஸ்லிம் மக்களின் கல்வி மேம்பாட்டுக்கென ஒரு சங்கத்தைத் தொடங்கினார்கள்.  முஸ்லிம் மக்களின் நல்வாழ்வில் ஆர்வம் கொண்ட அனைவரையும் அன்புடன் அழைத்து அந்தக்  கல்வி முயற்சிக்குத் தங்களுடைய உழைப்பைத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள்.  அந்தக் காலத்திலிருந்து பல்வேறு செயல்பாடுகள் நிறைவேறி வந்துள்ளன.  பெரும் அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன.  ஆயினும் கல்விக்குரிய தேவையென்பது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.  இதற்கேற்ப முஸ்லிம் மக்களிடையே கல்வியறிவு பெறுவதற்கான புத்தம் புதிய எழுச்சியும் ஏற்பட்டுள்ளதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


         இந்தப் புதுக்கல்லூரியைத் ( The New College) தொடங்கிவைக்கும் சம்பவத்தில் நானும் இடம்பெற்றிருக்கிறேன் என்பதற்காக மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.


         இந்தப் புதுக்கல்லூரியைத் தோற்றுவிக்க உற்றுழி  உதவியும் உறுபொருளும்  கொடுத்த அனைத்துப் பெரியோர்களையும் மிகவும் பாராட்டுகிறேன்.  இந்தக் கல்லூரி எதிர்காலத்தில் சிறப்பாக வளர்ச்சி அடைந்து, நிதியுதவி செய்த அனைத்துப் பெரியோர்களின் அறிவுடைமைக்கு ஒரு நினைவுச் சின்னமாகத்  திகழும் என்றும் உறுதியாக நம்புகிறேன்.


          மக்களை முன்னேற்றும் வகையில் அவர்களுக்கு உதவிகள் செய்யவேண்டும்.  பின்தங்கிய மக்களுக்கான சலுகையை அவர்கள் மீதான இரக்கத்தால் மட்டும் வழங்குதல் என்பது போதுமானது அல்ல.  ஏனென்றால் தங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தங்களின் பின்தங்கிய நிலைமைக்கானவை என்று அவர்கள் நினைத்துக்கொள்ளலாம்.   சலுகைகள் வழங்குவதில் நன்மைகளும் இருக்கின்றன; தீமைகளும் இருக்கின்றன.  சலுகைகளால் கிடைக்கும் நன்மைகள் என்பவை தற்காலிகமானவையே.   அந்தச் சலுகைகள் பின்தங்கிய நிலையைத் தக்க வைக்கவே உதவும்.  எனவே,  மக்களிடம் புதைந்து கிடக்கும் செயல்திறனைத் தோண்டி எடுத்து வெளிக்கொணர வேண்டும்.  இத்தகைய செயல்பாடுதான் மக்களுக்கான முன்னேற்றத்தினைக்  கொண்டுவரும்.  

          மக்களிடையே மறைந்து கிடக்கும் வளர்ச்சியடையாத ஆற்றல்களையும் பண்புநலன்களையும்  வெளிக்கொணர வேண்டும்.  மக்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி ஊக்குவிக்கும் செயல்களைச் செய்யவேண்டும்.   பின்தங்கிய நிலையைத் தக்கவைத்துக்கொள்ளப் போட்டியிடும் நிலையை உருவாக்குவதைவிடத் தன்னம்பிக்கையூட்டி அவர்களை ஆளாக்க வேண்டும்.  போட்டி மனப்பான்மையானது நலிவடைந்த பழக்கங்களை வளர்த்துவிட்டு நீண்டகால மேம்பாட்டு வளர்ச்சிக்கான உண்மையான ஆற்றலை அழித்தொழித்து வளர்ச்சிநிலையைத் தடுத்து நிறுத்திவிடும்.


          நான் உண்மையைப் பேசுகிறேன்.   எனது குரல் இரக்கமற்றது  எனக்கருதி என்னை யாரும்  தவறாகப் புரிந்து மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்.


            இங்கே நான் இன்னொரு கருத்தைப் பேசலாமா?


          நம் நாட்டில் தம்முடைய சொந்தச் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் மீது மக்கள் அக்கறை காட்டுவது என்பது மிக இயல்பான ஒன்றாகும்.    இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள்  மீது காட்டும் அன்புக்கு இணையானது.  இதனை யாரும் குற்றங்குறையாகப் பேசவோ கண்டிக்கவோ இயலாது.  இந்த அன்புணர்வு தவறானது என்றும் கருதிடத்  தேவையில்லை.  பொதுமக்களுக்கு  உதவுகின்ற தயாளகுணச்  சிந்தனையை  நாம் கெடுத்துவிடக்கூடாது.   ஏனென்றால் அந்த  நல்லெண்ண  நடவடிக்கை  எப்பொழுதும் தமது சமூக நலனை நோக்கியே இருக்கும்.  அறம்சார்ந்த இந்த  நற்பணிச் செயல்பாடு ஒரு குறுகிய வட்டத்திற்குள் நன்மையளித்தாலும் நல்லதுதான்.  அதிர்ஷ்டத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக இருக்கின்றான்.  பொருட்செல்வம் படைத்தோர்க்குத் தயாளகுணம் இருப்பதில்லை;  தயாளகுணம் கொண்டோர்க்குப் பொருட்செல்வம் இருப்பதில்லை. 
    மிக அதிகமான பரந்து விரிந்த  தயாள உள்ளம் வேண்டும் என்று ஒருவரைக் கட்டாயப்படுத்துவது
    தயாளகுணம் என்னும் நீரூற்றை  வற்றிப்போகச் செய்துவிடும் என்பதே உண்மை.


          நமது  குடியரசின் சட்டத்திட்டங்கள் வகுப்பு  ரீதியிலான கல்லூரிகள் தொடங்கப்படுவதை அனுமதிப்பதில்லை.  அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அரசின் வருமானத்தையும்  பொதுக் கருவூலத் தொகையையும் தனிப்பட்ட நிறுவனங்களுக்குச் செலவு செய்வதைத் தடைசெய்வது என்பது  அறிவுப்பூர்வமான செயல்தான்.  ஆனால்  பொதுநல நோக்கமும் தயாளச் சிந்தனையும் கொண்ட மனிதர்கள் ஏழை எளிய சிறுவர்களும் சிறுமிகளும் கல்வி பயில்வதற்கான -----  ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் கல்வி பயில்வதற்கான ----- கல்வி நிறுவனங்களை ஏற்படுத்துவதை யாரும் தடுத்துவிட முடியாது.  பொருட்செல்வம் படைத்த மனிதர்கள் தங்கள் சொத்துப் பத்தினை வசதி வாய்ப்புகள் அற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கவேண்டும்.   ஏதோ ஒருவகையில் குறுகிய வட்டத்திற்குள் அந்தத் தயாளச் சிந்தனை அடைக்கப்பட்டாலும் பொருட்செல்வம் படைத்தோர்கள் தங்கள் பொருட்செல்வத்தை வாய்ப்பு  வசதிகளற்ற மக்களுடன் பகிர்ந்துகொள்வதால் இந்தச் சமுதாயம் பயனடைகிறது என்பது உண்மைதான்.   தன் சமூகத்தைச் சேர்ந்த ஏழை எளியோர்க்கு உதவி செய்வதில் இருந்துதான் தயாளச் சிந்தனை தொடங்குகிறது;  பின்னர் அந்தத் தயாளச் சிந்தனை
    அனைவருக்கும் என அகன்று பரந்து விரிவடைந்து செல்லும்.  சிறப்புச் சலுகைக்காகவும் தரங்களைக் குறைப்பதற்காகவும் போராடுவதைத் தவிர்த்துவிட்டுத் தேவைகளோடு நிற்கும் மனிதர்களுக்கு நாம் உதவ வேண்டும்.   சலுகைக்கான போராட்டங்கள்     தரமின்மையையும் மந்தநிலையையும் ஊக்குவிக்கும்.   தேவைகளுடன் காத்திருக்கும்  மனிதர்களுக்கான கல்வி வாய்ப்பினைத் தனிமனிதர்கள் வழங்குவதன்மூலம்  தேவையுள்ளவர்களைக் கல்விகற்கச் செய்வதோடு நல்ல திறன்மிக்க மனிதர்களாக மாற்றுவதற்கான வாய்ப்பு வசதிகளை உருவாக்கும்.  வகுப்பு ரீதியிலான நிறுவனங்களுக்குப் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும்  வரிப்பணத்தில் செலவிடப்படக்கூடாது.  அதே வேளையில், அரசிடமிருந்து எந்த உதவிகளையும் கேட்காமல் தத்தமது அறக்கட்டளைகள் மூலமாகக் கல்விகற்க விழைவோர்க்குத் தனிமனிதர்கள் உதவி செய்வதை அரசாங்கமும் தடுப்பதில்லை.  தனிமனிதர்கள் தங்களின் தயாளச் சிந்தனைமிக்கக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள  அனுமதிக்கப்படவேண்டும்.  


           தயாளச் சிந்தனைகொண்ட அந்தத் தனிமனிதர்கள்  தேசிய அளவிலான பயன்பாடுகளை எதிர்பார்க்காமல்  தங்களின் விருப்பத் தேர்வின்படியிலான கல்வி உதவியின் மூலம்  தங்கள் தயாள குணத்தைச் செயல்படுத்தலாம்.  


           இங்கே எனது கருத்துகள் சரியான பொருளில் புரிந்துகொள்ளப்படும் என்றே உறுதியாக நம்புகிறேன்.


          அரசின் நிதித்துறைச் சார்ந்திருக்கும் தன்மையானது நமது பண்பாட்டு மரபும் தயாளச் சிந்தனையும் வறண்டுபோக வழிவகுத்துவிடும்.   அந்த வழிவகையை நானிங்குக் காண்கிறேன்.   


           குறிப்பிட்ட வகுப்பினரின்  தயாளகுண நற்செயலை மட்டுப்படுத்தினால் இந்த நாட்டினுடைய தயாயகுண நற்செயலின் ஊற்றுக்கண்கள் வற்றி வறண்டுபோய்விடும்.   அரசுக்குப் பெரும் நிதிச்சுமையாக மாறி மிகுந்த இடர்ப்பாட்டை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறேன்.


          பெரும்பான்மையான மக்களுக்கென உதவி புரியும் தயாளகுணம் கொண்ட ஆண்களையும் பெண்களையும் நாம் தட்டிக்கொடுத்து ஊக்குவிக்க வேண்டும்.


          குறிப்பிட்ட இலக்குகளை அடைந்திட அரசு நிதியைச் செலவழிக்காமலோ சமயச்சார்பின்மை என்ற தத்துவத்தைத் தொட்டுவிடாமலோ நாம் இதனைச் செய்துவிட   முடியாது.  வகுப்பு ரீதியிலான தயாளகுண அறக்கட்டளைகளை  மட்டுப்படுத்துவதால்  எல்லாம்,  வகுப்புவாத உணர்வுகள் மறைந்துவிடுவதில்லை.   இதற்கு மாறாகத் தயாளகுணப் பழக்கங்கள்  மறைந்துபோகும் என்பதே உண்மை ஆகும்.


           சமயச் சார்பின்மை குறித்துப் பேசும் பொழுது சமயச் சார்பின்மை குறித்த அரசின் கொள்கையை எவரும் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.  நம்முடைய ஆழ்மனதில் ஒரு விழிப்புணர்வையும் மதிப்பளிக்கும் மனப்பாங்கையும் வளர்த்துக்கொள்ள  வேண்டும்.   அப்படி வளர்த்துக்கொள்ளாவிட்டால் வாழ்க்கையானது சீராக அமையாது.   அறிவுக் குறைவினால்  அகம்பாவம் தோன்றுவதில்லை என்பதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.  அறிவென்பது  அகன்று பரந்து விரிந்த ஒரு கடல் என்பதையும் நாம் அந்தக் கடலில் சின்னச்சின்னக் கட்டு மரங்களைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி மிதந்துகொண்டு இருக்கிறோம் என்பதையும் பொதுமக்களுக்கு உணர்த்தவேண்டும்.   


          நாம் இந்த உலகில் பிறரிடம் அன்பை வெளிப்படுத்தும் மனப்பாங்கினையும் பிறரை மதிக்கும் பண்பினையும் வளர்த்துக்கொண்டு வாழும் மனநிலையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்.  அன்பை உள்ளடக்காத கல்வியானது முழுமையற்றதாகும்.
    சமுதாய வளர்ச்சிக்கு ஆன்மிகக் கல்வியும் கலைக்கல்வியும் தேவையானவை ஆகும்.


          உண்மையான மதிப்பையும் பக்தியையும் வளர்ப்பதில் கவனம் செலுத்தும் கல்வி முயற்சியே நம் நாட்டுக்கு இன்றியமையாத் தேவையாகும்.


           நமது பண்பாடும் நாகரிகமும் மிகப் பழமையானவை ஆகும்.  கல்வியின் நன்மைகள் குறித்து அனைத்து மக்களாலும் பரந்த அளவில் பாராட்டப்படுகின்றது.  பள்ளிக்கூடங்களைச் சாராமல் நாம் கல்வியென்னும் சக்கரங்களை ஓட்டிவிட முடியும்.   இதன் பொருள் என்னவென்றால், ஜீப்,  லாரிகள்  போன்ற வாகனங்களைக் கல்வி கற்பதற்கு ஏற்ப வடிவமைத்துக் தொலைததூர  நாட்டுப்புறப் பகுதிகளுக்கும் சிற்றூர்களுக்கும் கொண்டுசென்று எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வாய்மொழிக் கல்வியைக் கிராமப்புற மக்களுக்கு நம்மால் வழங்கிட  முடியும் என்பதேயாகும்.  இத்தகைய கல்வித் திட்டத்தின் மூலம் பொதுமக்களைக் கவர்ந்திழுக்க இயலும்.


          வேளாண் பெருங்குடி மக்களின் குழந்தைகளையும் நெசவாளர் குழந்தைகளையும் பள்ளிக்கூடம் என்னும் சிறைச்சாலைக்குள் அடைத்துவிட்டுப்  பெற்றோர்களின் வாழ்க்கைக்கும் அவர்களது தொழில்களுக்குமான பிணைப்பை அறுத்தெறிந்துவிட்டோம்.  இப்படி அறுத்தெறிந்ததில்  எந்தப் பயனும் ஏற்படவில்லை.  பெற்றோர்களோடும் அவர்களது தொழில்களோடும் குழந்தைகளுக்கு இருக்கவேண்டிய  பிணைப்பை அறுத்தெறிந்துவிட்டதால் குழந்தைகளை அவர்களது வீட்டுப் பண்பாட்டில் இருந்தும் அந்நியப்படுத்திவிட்டோம்.  அந்தப் பிஞ்சு உள்ளங்களில் தாழ்வுணர்ச்சி ஏற்படுவதற்கு நாமே காரணமாகிவிட்டோம்.  கல்வியறிவற்ற அந்தப் பெற்றோர்களுக்கும் அவர்கள்தம் குழந்தைகளுக்கும் இடையிலான இணைப்பைத் துண்டித்துவிட்டோம்.  அதனால் ஏற்பட்ட பேரிழப்பு என்பது துயரமானது.  குழந்தைகள் தங்கள் பெற்றோர்களின் ஆடு மாடுகளோடும் நெசவுத் தறிகளோடும்   வாழ்க்கையை  நகர்த்திட வாரத்திற்கு இரண்டு நாள்கள் அவர்களை நகரும் ஊர்திகளில் உட்கார வைத்து அவர்களுக்கு வாய்மொழிக் கல்வியின் மூலம் கதைகள் சொல்வோம்.    படங்கள் மூலம் பாடம் கற்பிப்போம்.  நமது வேளாண் பெருங்குடி மக்கள் தமது குழந்தைகளுக்குக் கல்வி வேண்டும் என்றும் அவர்களால் எழுதவும் படிக்கவும் இயலவேண்டும் என்றும் விரும்புகின்றனர்.  இப்படிபட்ட கல்விப் புகட்டுதல் மூலமாக  அவர்களுக்கு நிறைய கற்பிக்க முடியும்.   கல்வி கற்பதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட   ஜீப்,  லாரிகள்  என்னும் நகரும் பள்ளிகளின் மூலம் குழந்தைகளுக்குக் கல்விப் புகட்டுவதால்  இந்த நாட்டினுடைய முகமே மாறிவிடும்.  எனவே, கற்பிக்கும் ஆசிரியருக்கும்  கற்கும் குழந்தைகளுக்கும் இது ஒரு நல்வாய்ப்பாகவே   அமையும். 



          
          இந்தப் புதுக்கல்லூரியை  உருவாக்க ஒன்றிணைந்து செயல்பட்ட அனைத்து அன்பர்களையும்  நான் மனமாரப் பாராட்டுகிறேன்.   உயர்கல்வியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற விருப்பம் இளம் உள்ளங்களில் வெகு அதிகமாகவே காணப்படுகிறது.   அதேநேரம் கல்வியின் தரத்தைக் குறைத்துவிடாமல் அனைவர்க்கும் உயர்கல்வி கிடைத்திடச்  செய்வோம்.  கல்வியின் தரம் குறைந்துவிடக்கூடிய அபாயத்தில் இருந்து நமது தென்னிந்தியப் பகுதி (தெற்கு ராஜதானி)  தப்பித்துவிட்டது.   எனவே,  உயர்கல்விக்கு வாய்ப்பு வசதிகள் விரைவில் விரிவடைய வேண்டும்.


          அமைப்பு ரீதியிலான இந்தப் புதிய முயற்சிக்கு என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துரைக்க வாருங்கள் என்று உங்களை அன்போடு அழைக்கிறேன்.


                                ●●●

  2. பனுவல்

    ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

    பனுவல்

  3. சுவடி

  4. கட்டுரை
    நெடுவழித் தனிமரம்
    *********************************
    **********************************
              பாகம் ---- 1

                             ----முரளிஅரூபன்

         அட்சரத்திற்கு லட்சம் என்று சொல்வார்களே அதைப்போல 1950களிலேயே திரைப்பாடல் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் ரூபாய் வாங்கிய நட்சத்திரக் கவிஞராகத்(தகவல் உபயம் காதர் ஷெரீப்)திகழ்ந்த கவி கா.மு.ஷெரீப் தமது திரைப்பாடல்கள் சிலபோது பிறர் பெயரில் வெளிவருவதை வெகு எளிதாகக் கடந்துபோன செய்தி வியப்பூட்டுகிறது.    பாட்டுக்கு வாங்கிய அந்தப் பெருந்தொகைகூடத் தன்பாட்டுக்குப் போனதுண்டு பிறர் துயர்துடைக்க என்ற செய்தியும் நெகிழ வைக்கிறது.

         கதை,வசனம்,பாடல் எனத் திரைப்படப்பணி;  ஒளி, சாட்டை, தமிழ் முழக்கம் எனப் பத்திரிகைப்பணி;  கட்சி, மாநாடு, போராட்டம், சிறைவாசம் என அரசியல் பணி;  இப்படியான பாறைகளுக்கிடையே பசுமை பூசிய தாவர மண்டலமாக அவரது இலக்கிய ஊழியம் இயன்றிருக்கிறது.  முக்கியமாகச் சீறாப்புராணத்திற்கான அவரது உரைப்பணியை விதந்துரைக்க வேண்டும்.  அதேநேரம் சீறாவுக்கு முன்னமேயே சிலப்பதிகாரத்திற்கு பத்திரிகையில்  உரையெழுதியுள்ள செய்தி என்னைத் தூங்கவிடாமல் துரத்தியது.

    கவி கா.மு.ஷெரீப்பின் கலை இலக்கிய அரசியல் வாழ்வை விரிவும் ஆழமும்கூடிய பனுவலாக எழுதப் பயணிக்கும் எனக்கு  இந்தச் செய்தி பேரின்பம் பயத்தது.  ஏற்கெனவே அவரது இலட்சிய வாழ்க்கை குறித்த  செய்திகளைக் காதாரக் கேட்டுக் கண்ணாரக் கலங்கிய என்னை இந்த இன்பச் செய்தி   திக்குமுக்காட வைத்துவிட்டது.  இந்நிலையில் அவரது சீறாப்புராண உரையை மறுவாசிப்புச் செய்துகொண்டேன்.    

    சீறாப்புராணத்திற்கு முன்பே சிலப்பதிகாரத்திற்கு  உரையெழுதித் தம்மைத் தயார்படுத்திக்கொண்ட செய்திக்குறிப்பை அந்நூலில் அவதானித்தபோது புலன்கள் கிளர்ச்சியுற்றன.    

    எட்டுத்திசை பதினாறு கோணங்களில் எல்லாம் அலைந்து திரிந்து கவி கா.மு.ஷெரீப்பின் சிலப்பதிகார உரையைக் கண்டடைந்தேன் அல்ஹம்துலுல்லாஹ்.  

          சிலப்பதிகாரம் ---  புகார்க்காண்டம் --- கானல்வரி   வரையிலான அவரது உரையை 250 பக்கங்களில் பதம்பிரித்து எழுதி நிறைவுசெய்துவிட்டேன்.  (இதுவரையில்தான் அவர் எழுதி இருக்கிறார். இதுகுறித்து அடுத்த பாகத்தில் எழுதுவேன்)  அந்தக் கைப்பிரதியை ஒளியச்சும் செய்துவிட்டேன்.  அந்த ஒளியச்சுப் படியில் பிழைதிருத்தம் செய்துகொண்டிருக்கிறேன்.  இன்ஷா அல்லா நூலாக்கம் பெற்று     வெளிவரும்.  

    அப்படியென்றால் கவி கா.மு.ஷெரீப்பின் இந்தச் சிலப்பதிகார உரை முதன்முதலாக   நூலாக்கம் பெற்றதாக இருக்கும் அல்ஹம்துலுல்லாஹ்.

         நூலைக் கண்டைந்த சம்பவங்கள் அடுத்த பாகத்தில்.

                             **********

  5. கண்ணாடித் திரைகளையும்
    காகிதச் சுவர்களையும் தாண்டி

    வெட்ட வெளியில்
    தனிப்பாடலாய் மலர்கிறது
    தனிப்பெரும் சூரியன்.

    வெள்ளம் வடிந்த
    நிலத்தின் ரேகையெனப் படிந்தன
    வைகறையின் நிறப்புனைவுகள்.

    மௌனத்தில் பதிவான ஓசைகள்
    பறவை மொழியில்
    இசைப்பாடலாய்
    இடம் பெயர

    பகலின்
    முரட்டு வழித்தடத்தைப்
    பட்டாம்பூச்சிகள்
    மிருதுவாக்கின.

    நாமோ
    வெறுமனே
    ஜன்னலைத் திறக்கிறோம்
    ஆகாயத்தைச் சதுரங்களாய்
    நறுக்கியவாறு

    தீமிதித்தல் போலும்
    தினசரிகள் மேய்ந்து
    கோப்பைத் தேநீராகப்
    பழுப்பேறிய தினங்களைப்
    பருகி முடிக்கிறோம்.

    ஒரு வாய்ப்பாடாக
    உச்சரித்துத் தீர்த்த பொழுதின்

    அற்றை இரவின்
    ஒற்றை நிலவும்

    மொட்டை மாடியின்
    மெல்லிய காற்றும்
    பேசவந்து
    பேச்சற்றுத் திகைக்கும்

    அப்போது நாம்
    கதவுகளை 


                                 *********














          மௌனத்தில் பதிவான  ஓசை                     


     ( தந்தையர் நாள் வாழ்த்துக்   
                             கவிதை)
    -------------------------------------------------------------------

    பெரிது பெரிது
     வானம் பெரிது

    வானமோ பூமிமேல் 
    விரித்த  போர்வை

    பூமியோ மண்துகள்
    பரப்பின்  சேர்க்கை

    மண்ணோ  கல்லின்
    மூலக்  கூறு

    கல்லோ  நதிகள்
    கொணர்ந்த  பேறு

    நதிகளோ கடலிடை
    நீண்டு  கலப்பவை

    கடலோ  புவியினும்
    காணப்  பெரிது

    கடலினும்  தந்தையர்
    தியாகம்  பெரிதே.

                             -----முரளிஅரூபன்
                                       20--06--2021